திங்கள், அக்டோபர் 08, 2012

அம்ரிதா ஏயெம், ஈழத்தின் முக்கியமான கதைசொல்லி


அம்ரிதா ஏயெம், ஈழத்தின் முக்கியமான கதைசொல்லி.
இவரை எத்தனைபேருக்கு தெரியும்..?

மிகவும் முரண்பாடான,பிரச்சினையான,சிக்கல்கள் நிறைந்த நிறுவனமாக நான் இலக்கியத்தையே கருதுகிறேன்.நிலவுகிற புனைவுச் சட்டகங்களுக்கு இசைவானதாக உருவாக்கப் படும் பிரதிகளும், அந்த மரபுகளை விமர்சித்து,அதற்கு அப்பால் கடந்து செல்ல முயற்சிக்கும் பிரதிகளும், நிலவுகிற மரபிலிருந்து முற்றிலும் முரண்படுகிற பிரதிகளும் இலக்கியமாகவே பாவிக்கப்படுகிறது.அது போல, வித்தியாசமான பிரதிகளை உருவாக்கினால் என்ன நிகழும் என்பதை முயற்சிப்பதும் இலக்கியமாகவே பயிலப்படுகிறது.

நாவல்,சிறுகதை,கவிதை என நம்பப்படுகிற வடிவம்,அது,தன்னகத்தே கொண்டிருக்கும் உள்ளடக்கம் போன்றவற்றோடு அனுசரித்துப்போகும் கதைவரைவு மற்றும் கவிதைச் செயல் போன்றவை அதிக நெருக்கடிகளைச் சந்திக்கிறது அல்லது கண்டுகொள்ளப்படாமலே போகிறது.
இந்தப் போக்கும் கவனயீனமும் எல்லாச் சூழலிலும் இருக்கிறது.அதற்கான பிரதானமான காரணம், அந்தச் சூழலில் முக்கியமானவர்களாக வலம்வருபவர்கள் பெரும்பாலும், அவர்களுக்கு அனுக்கமானவற்றையே பாதுகாக்க முயற்சிப்பர்.அதனூடாகத்தான் தமது இருப்பை மீண்டும் உறுதி செய்வர்.நிலவுகிற போக்குகளுடன் போட்டியிடத்தக்க பிரதிகளையும், அப் பிரதிகளை உருவாக்கும் புதியவர்களையும் அமைதிப்படுத்தவே அதிகமாக உழைப்பர்.(இதற்கு விதிவிலக்குகளும் உண்டு.ஆனால்,அவர்கள் சூழலில் அதிக பிரபலமில்லாதவர்களாக இருப்பர்) இதனூடாக, வித்தியாசமான எழுத்து மற்றும் புனைவுகள் இலக்கியச் சூழலில் அமுங்கிப்போகும் வாய்ப்பு அதிகம்.

இது ஈத்துச் சூழலிலும் பல கால கட்டங்களில் நடந்திருக்கிறது.நடந்துகொண்டிருக்கிறது. அதிலும், 90 களுக்குப் பின்னர் எழுதவந்த பலரை கவனிக்காமலே விட்டிருந்தனர்.மிகச் சிலரால் தீர்மாணிக்கப்படுகிற, மூடப்பட்ட வெளியாகவே ஈழத்து இலக்கியப் பரப்பு காட்சி தந்தது.அந்தக் கட்டமைப்பை ஒவ்வொரு காலகட்டத்திலும் கலங்கடிக்கும் செயற்பாடுகளும் தீவிரமாக இருந்தே வந்தன.பிரசுரத்திற்கான களம் கிடைக்காமலே அதிகம் பேர் அமைதியாகினர்.களம் கிடைத்தாலும் அந்தப் பிரதிகள் முறையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு போதுமான கவனத்தை கொடுக்க மறுத்தே வந்தனர். 2000ம் ஆண்டின் நடுப்பகுதியில் முற்றிலும் இளைஞர்களாலே நடாத்தப்பட்ட மாற்றுப்புனைவுகளும், எதிர் கருத்துநிலைகளும் கோட்டைகளை உடைத்து இலக்கியத்தை வெளியே கொண்டுவந்தது. அதற்குரிய பெரும்பங்கு 'பெருவெளி;' சிற்றிதழையே சாரும்.
எங்கும்போல, ஈழத்திலும் இலக்கியத்தை தீர்மாணிக்கும் சக்தியாக, பெரும் பிம்பங்களா கருதப்பட்ட ஆளுமைகளை சந்தோசப்படுத்துகிற புதியவர்கள் மாத்திரமே,பிற்காலத்தில் பயனடைகிற வாய்ப்புகள் அதிகமிருந்தன.தமது கருத்தோடு ஒத்துப்போகிறவர்களைNயு முதன்மைப்படுத்தும் மனித இயல்பு பெரிதும் செயற்பாட்டில் இருந்தது.

இவை ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, மறுத்தோடிகளாக செயற்படும் ஒரு தலை முறை மறு புறத்தில் உருவாகிக்கொண்டே இருந்தது.நீடிக்க முடியாமல் பலர் ஒதுங்கியும் போயிருக்கின்றனர்.இருந்தும் அவர்கள் மையக் கருத்துநிலைகளோடோ, ஜாம்பவன்காளக கருதப்பட்டவர்களுடனோ கலந்துபோகவில்லை.இப்படி நிறையப்பேர் ஈழத்தில் இருக்கிறார்கள்.அதில் ஒருவர்தான் அம்ரிதா ஏயெம்.90களில் எழுதத்தொடங்கிய மிக முக்கியமான கதைசொல்லி இவர்.2002ம் ஆண்டு மூன்றாவது மனிதன் பதிப்பகத்தினால் இவரது சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்தது.அது கவனிக்கப்படவில்லை.அந்தச் சலிப்பே அவரை இலக்கியப் புனைவிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக தூரப்படுத்தியிருந்தது. இப்போது, மீண்டும் உற்சாகத்தோடு எழுதவந்திருக்கிறார்.ஆனால், இவரின் இலக்கிய வாசிப்பு என்றும் இடைவெளிகளை கொண்டிருக்கவில்லை. ஆங்கிலத்திலும் வாசிக்கும் பழக்கங்கொண்ட இவர் தற்போது,கிழக்கு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார். கடந்த பத்தாண்டுகளில் பல மொழிபெயர்ப்புக்களை செய்திருக்கிறார். நாவல் ஒன்றைப் புனையும் முயற்சியில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அம்ரிதா ஏயெம் அவர்களின் கதைகளை எனது வலைத்தளத்தில் பதிவிட தீர்மானித்து அவரை அனுகியபோதும், மிகவும் தயக்கத்துடனே இருந்தார்.பின்,எங்களுக்கிடையிhன உறவு அதை சாத்தியப்படுத்தியது. பின்நவீன நிலவரம் குறித்து பேசக்கிடைக்கும் மிகச் சிலரில் அம்ரிதாவும் ஒருவர்.

அவரின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து 'தறு' என்கின்ற ஒரு கதையை இங்கு பதிகிறேன்.இது நிறையப் பேச நம்மைத் தூண்டுகின்ற கதை.ஒருவருடைய அதுவும் ஒரு ஆணுடைய வாழ்வை சுயசரிதைபோல சொல்லி புனைவை உருவாக்கும் தன்மைகொண்டது.இந்தக் கதை என்ன செய்கிறது என்பதைப் பற்றி அதிகம் விபரிப்பதைவிட, கதை கொண்டிருக்கிற புனைவு உத்திபற்றி மாத்திரம் சில விசயங்களைச் சொல்ல நினைக்கிறேன்.

அம்ரிதா உருவாக்கும் கதைசொல்லி, தன்னிலை விளக்கமாக தனது சரித்திரத்தை பார்வையாளர்களோடு பேசிக்கொண்டிருப்பதுதான்,இது மரபான ஒரு கதைசொல்லல் உத்திதானே என்று யாரும் நினைக்கலாம் ஆனால்,அந்த உத்தியை கதையின் நடுப்பகுதியில் முற்றிலுமாக உடைத்துவிடுகிறார். கடற்தொழிலாளியான, கதைசொல்லி கடலில் வீழ்கிறார்.அதன் பின் அவரின் மனவெளி மாத்திரமே இயங்குகிறது.உடல் சார்ந்ததும்,வெளியுலகினூடான தொடர்புகளும் இல்லாதுபோகிறது. இப்படி நிகழும் சந்தர்ப்பத்தில் வேறு கதைசொல்லி ஒருவர் அங்கு வரவேண்டும்.அப்போதுதான் கதை நகர வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி எவரையும் கொண்டுவராமல், தானே தனது கதையைச் சொல்லுவதாக தொடர்கிறது.கடைசியில் அவர் மரணித்தும் விடுகிறார்.

கதையின் நடுவில் கதைசொல்லி செயலிழந்துவிடுகிறார்,செயலிழந்த கதைசொல்லி மிகச் சாதாரண நிலையில் இருப்பவரைப்போல் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.ஆனால், கதைச் சம்பவங்களோ முற்றிலும் அதற்கு மாறாக, கோமா நிலையிலிருக்கும் ஒரு நபராக கதைசொல்லியை சித்திரித்துக்கொண்டு செல்கின்றன. ஒரே நபர் ஒரே நேரத்தில், செயலூக்கமுள்ள ஒருவராகவும், செயற்றிறன் அற்றவராகவும் கதையெங்கும் உலாவருகிறார்.இது முற்றிலும் பின்நவீன கதைச்செயல்.ஈழத்தில் இப்படியான உத்தி 90களிலே அம்ரிதா ஏயெம் அவர்களால் கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இந்தக் கதைச்செயல் இங்கு கவனிப்பாரற்று கிடந்தது.அப்போது,பின்நவீனத்திற்கு எதிரானவர்களும்,அதுபற்றிய புரிதலற்றவர்களுமே இங்கு அதிகம் என்பதும் ஒரு காரணம்.இந்த மறைக்கப்பட்ட அல்லது பேசப்படாத பிரதிகளை மீண்டும் நாங்கள் வாசித்து அதை வெளியே கொண்டு வருகிறோம். அம்ரிதா ஏயெம் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.

'தறு'
-அம்ரிதா ஏயெம்-

கடல் வெள்ளைக் கரை போட்ட நீலச்சாரி உடுத்த என் தாய். கடல் ஆத்திரக்காரனுக்கும் அவசரக்காரனுக்கும்;, பெருமைபிடித்தவனுக்கும் ஒன்றும் கொடுத்ததில்லை. கொடுத்ததெல்லாம் என்னவோ குறைவுதான். கடல் பொறுமைக்காரனுக்குத்தான் கிள்ளிக்கேட்க அள்ளிக்கொடுத்தது. கடல் என்பது நீலம். நீலம் பொறுமையின் சின்னம். ஏன் எனக்கும் கடல் அள்ளித்தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உள்ளே போனால் பணம், வெளியே வந்தால் பிணம்;. இதுதான் எனக்கு கடல் சொன்ன மந்திரம். இந்தக் கடலில்தான் என்னையும், இன்னொருவனையும் "ஓசன்பேட்" சுமந்து கொண்டு ஆடி ஆடி சென்று கொண்டிருக்கின்றது.

இன்னும் ஐநாறு மீற்றர் போனதும், படகு நிறுத்தப்படும்.. எனது வயிற்றில்  16 இறாத்தல் இரும்பும், முதுகில் இரு சிலிண்டர்களும் கட்டப்படும்.  கண்ணுக்கு கவரும், காலுக்கு துடுப்பும், கத்தியும், பிஸ்டலும், இடுப்பிலுள்ள சிறு வளையத்திற்கூடாக நைலோன் கயிறும் மாட்டப்பட்டு முதுகுப்பக்கமாக நீருக்குள் விழுந்து, மூச்சை அடக்கி, கடலடிக்குப் போய், கூடக்கொண்டு போகும்  உரப்பைக்குள்  கடல் அட்டையை நிரப்பிக் கட்டினால் பை தானாக மேலே வரும். அதை படகிலிருப்பவன் சேகரித்து படகுக்குள் போடுவான். ஏதாவது ஆபத்து என்றால் இடுப்பு வளையத்திலுள்ள கயிற்றை  நான்கு, ஐந்து தடவை விரைவாக அசைக்க  படகிலிருப்பவன் ஆபத்தென்று உணர்ந்து கயி;ற்றை வேகமாக மேலே தூக்கி என்னை ஆபத்திலிருந்து  மீட்பான். கறுப்பு அட்டையை படகுச் சொந்தக்கார முதலாளிக்கு ஒரு விலைக்கு விற்க,  அவன் அதனுடன் இருபது முப்பது ரூபாய் வைத்து  வேறு வியாபாரிகளுக்கு விற்பான். வெள்ளை அட்டை என்றால் எங்களுக்கு சந்தோசம். நூற்றுக்கணக்கில் விலை போகும். எப்படியோ கூட்டிக் கழித்துப்பார்த்தாலும் மாதம் பதினைந்தாயிரத்திற்கு மேல் மி;ஞ்சும். உள்ளே போனால் பணம்;;. வெளியே வந்தால் பிணம் என்பது உண்மைதான். கடல் என்னும் வள்ளல்கார  அம்மா பொறுமைக்காரர்களுக்கும் வீரர்களுக்கும்தான் அள்ளிக்ககொடுப்பது வழக்கம். கடல் அன்னை வீரத்தின் உறைவிடம். எவ்வளவோ வீரக் கதைகளை தன்நெஞ்சிலே புதைத்து வைத்திருக்கிறாள்.

இப்போது "ஓசன்பேட்" குறித்த இடத்தை அடைந்துவிட்டது. எனது பத்தாவது வயதில் பராக்கிரம சமுத்திரத்தின் வலது கரையின் நீர் பெருக்கெடுக்கும் அணைக்கட்டில்  உயரத்தில் நான் புதினம் பார்த்துக்கொண்டிருந்தபோது, பக்கத்து கடையில் வேலை செய்யும் காமினி என்னை நீருக்குள் தள்ளி விட்டான். நீருக்குள் போன நான் மேலுக்கு  வராதபோதுதான் எனக்கு நீச்சல் தெரியாது என்பதை தெரிந்து, பாய்ந்து என்னை மீட்டு,  அன்றிலிருந்து நீச்சல் ஆசானான். பின்பக்கம், முன்பக்கம் நீந்துவது, சுழியோடுவது, நீருக்குள் எறிகிற கற்களை பொறுக்கி வருவது என்று நிறையவற்றை கற்றுத் தந்தான். பதினெட்டு வயதில் ஊர் திரும்பியபோது  என் அட்டை பிடிக்கும் நண்பனொருவன் இடுப்பில் இரும்பைக் கட்டி கடலுக்குள் கொண்டு போனான். எனது கடற் தாயின் அழகைக் கண்டு வியந்து போனேன். அவன் எனக்கு நிறைய நுட்பங்களை கற்றுத் தந்தான். முதல் நாளே நான் எனது முகத்தையும், கண்ணாடியையும் தாக்க வந்த சுறாவை பிஸ்டலால் சுட்டுக் கொன்றேன். தாயின் சேலையில் சிவப்புக் கறை. 


அப்போதுதான் இந்த தொழில் எவ்வளவு அபாயம் என்பது புரிந்தது. அமிழ்வதும் ,மேலே வருவதும் உடனே செய்ய முடியாது. ஒவ்வொரு குறிப்பிட்ட ஆழத்திலும் குறிப்பிட்ட நேரத்தைக் கடத்திவிட்டுத்தான் மேலேயோ அல்லது கீழேயோ வரலாம். இ;ப்படித்தான் புறாமலைக்கு அருகில் அட்டை பிடித்துக்கொண்டிருந்த மன்னார் சகோதரர்களுக்கு பென்ட் (நைட்ரஜன் நார்க்கோசிஸ்) வந்து கை கால் மடக்க முடியாமற்போய் நீருக்குள்ளே இறந்து போனார்கள். அவர்களின் உடலை நீரோட்டம் அடித்துச்சென்றுவிட்டது. ஒரு முறை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இருவர் கூட அதே பகுதியில் சிலிண்டர் அடைபட்டு செத்துப் போனார்கள். அவர்களின் உடலுக்கும் இதுதான் நடந்தது.

ஓசன்பேட்டிலிருந்து நங்கூரத்தை எறிந்துவிட்டு  கடலைப் பார்க்கிறேன். கடல் அமைதியாகவிருந்தது. இந்தப் பெண்தானா சீறி எழுந்து உயிர்களை துவம்சம் செய்கிறாள். நம்பமுடியவில்லை. அமைதியில்தான் ஆழமும் இருக்கின்றது. அபாயமும் இருக்கின்றது. படகுகூட ஒரு பக்கம் இழுபடுவது மாதிரி எனக்கு தோன்றுகின்றது. இது நீரோட்டத்தினாலோ அல்லது பிரமையினாலோ என்னவோ. ஆனால் கடல் அன்னைக்கு வீரனைத்தான் பிடிக்கும். ஆனால் என் மனைவிக்கோ இந்த தொழில் பிடிக்கவில்லை.  என் எட்டு வயது மகளுக்கும், என் ஆறு மாத ஆண் பிள்ளைக்கும் நினைவு தெரிந்தால் பிடித்திருக்காமல்தான் இருந்திருக்கும்.

காலில் துடுப்பை மாட்டி, ஒக்சிசன் சிலிண்டர் இரண்டையும் முதுகுக்குப் பின்னால் மாட்டி  முகத்திற்கும், மூக்கிற்கும் கண்ணாடி மாட்டிவிட்டேன். இன்னும் சுவாசக் குழாயை வாய்க்குள் திணிப்பதும், முதுகுப் பக்கமாக கடலில் விழுந்து மூழ்குவதும்தான் பாக்கியிருக்கின்றது. இரவு நடந்ததை நினைத்து கொள்கின்றேன். இந்த கடலட்டைகளுக்காக கடலில் மூழ்குவதை விட்டுவிடு;வது சம்பந்தமான எனது மனைவியின் வழமையான நச்சரிப்பு ஞாபகம் வருகின்றது. பிள்ளைகளை வளர்க்க,  பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுக்க அவர்களுக்கு  நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக்கொடுக்க பணம் தேவை. அது இந்த தொழிலில்தான் கிடைக்கின்றது. இதைவிட்டு உடனே செய்யக்கூடியவகையில் வேறு தொழிலும் தெரியாது.  பிள்ளைகள் வளர்ந்த பின் விட்டு விடுவேன் என்றுதான்  சொல்லுவது வழக்கம். அவளும் வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொள்வாள். கடந்த இரவும் இதுதான் நடந்தது. எனது எட்டு வயது மகள் கட்டிலிலே படுத்துக் கிடந்தாள். எனது ஆறு மாத மகனும் அவளுக்கருகில் தூங்கிக்கொண்டிருந்தான். அவனின் கழுத்தைப் பார்க்கிறேன.; அவனின் கழுத்து வெறுமையாக இருந்தது.  புதிய ஒக்சிசன் சிலிண்டர் வாங்க அதை ஈடுவைக்கவேண்டி ஏற்பட்டது. அந்த மாலையை எப்படியோ மீட்டு மீண்டும் அவனுக்கு போட வேண்டும். மகளும் அடிக்கடி சிவத்த கலர் சைக்கிள் வாங்கிக் கேட்கிறாள். அவளுக்கும் எப்படியோ அந்தச் சைக்கிளை வாங்கிக்  கொடுக்க வேண்டும். ஓசன்பேட் அலையில் ஆட சிந்தனை கலைய வாய்க்குள் குழாயைத் திணித்து கடலில் மூழ்கிவிடுகின்றேன்.

கீழே போகின்றேன். போகப் போக திடிரென கணப்பொழுதில் நீரின் வெப்பநிலை மாறுகின்றது. ஏதோ விபரீதம் நிகழப்போகின்றது என்பதை உணருவதற்கிடையில் இன்னும் கீழே  எனது சக்திக்கு மீறி சென்றுவிட்டேன். நீரோட்டத்தில் மாட்டிக்கொண்டதை உணர்கின்றேன். மேலே வர முயற்சி செய்கிறேன் முடியவில்லை. வழமையாக நீரோட்டத்தில் மாட்டிக் கொண்டால் நீரோட்டத்துடன் சென்று ஒரு நிலையில் நீரோட்டத்தின் வேகம் பூரணமாக குறைந்தவுடன் அதிலிருந்து நாம் விடுபட்டுக்கொள்ளலாம். கையை காலை ஆட்டாமல் நானும் நீரோட்டத்துடன்  செல்கின்றேன். நீரோட்டம் என்னை அடித்துக்கொண்டே செல்கி;ன்றது. மலைகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் நீரோட்டம் மலையில் மோதி நீரோட்டத்தின் வேகம் கூடிக்கொண்டே இருந்தது. நான் கைகளை தலைக்கு முன்னால் நீட்டி மலைகளில் முட்டாதவாறு என்னைப் பாதுகாக்கின்றேன்.

ஒருவேளை இதுதான் என் கடைசி நேரம் என்னவோ? எவ்வளவு நேரத்திற்கு இந்த நீரோட்டம்; அடித்துச் செல்லும்,? எப்போது விடும்? இரண்டு சிலிண்டர் ஒட்சிசன் முடிந்தால் என் நிலை என்ன? என்றெல்லாம் சிந்திக்கிறேன். ஒரு வேளை என் கதை முடியப் போகின்றதோ என்று நினைக்கின்றேன். மனைவியையும், மகளையும் மகனையும் நினைக்கின்றேன். அந்த மகளுக்கு வாங்கித் தருவதாக வாக்களித்திருந்த சைக்கிளினதும், மகனின் ஈடுமூளவேண்டிய தங்கச்  சங்கிலியும் ஞாபகம் வருகின்றது. என் மனைவிக்கோ நான் வேண்டும். இதற்காகவேனும் நான் உயிர்பிழைக்க வேண்டும். கடவுளே என்னை உயிர் தப்ப வை என்று வேண்டிக் கொள்கின்றேன். நீரோட்டத்தின் வேகம் குறைவதாக உணர்ந்தேன். எனக்கு உள்ளுர சந்தோசம் வருகின்றது. கடவுளே உனக்கு எனது நன்றிகள். நீ பெரியவன். இ;ப்போது நீரோட்டத்தின் வேகம் அதிலிருந்து நான் நீங்கி  மேலே வருவதற்குப் போதுமான அளவு குறைந்துவிட்டது. இப்போதும் மனைவியும், மகளும், மகனும,; அந்தச் சிவத்த நிற சின்ன சைக்கிளும், மாலையும் ஞாபகத்திற்கு வருகின்றன.  நீர் மட்டத்திற்கு வந்து விட்டேன். மீண்டும் இ;ப்போதுதான் உயிர் பிறந்தது. ஒக்சிசன் சிலிண்டர்கள், துடுப்பு, இரும்பு எல்லாவற்றையும் உடம்பிலிருந்து கழற்றிவிட்டேன்.

மணிக்கட்டைப் பார்க்கின்றேன். இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக இழுத்துச் செல்லப்பட்டிருப்பதை உணர்கி;றேன். சூரியனை வைத்து கரையைத் தேடுகின்றேன். அலைகள் கரையை மறைக்கின்றன. கரை கறுப்புக் கோடடித்த விளிம்பு மாதிரி தெரிகின்றது. கரையை நோக்கி நீந்துகின்றேன். ஏற்கனவே மிகவும் களைத்துப் போயிருந்த எனக்கு, களைப்புப் பற்றிய பிரக்ஞை, கரையைக் கண்டதால் உணர்வுரீதிPயாக அற்றுப் போயிற்று. நீந்துகிறேன். நீந்துகிறேன், கையை காலை ஆட்டி, அடித்து நீந்துகின்றேன். மனைவி, மகள,; மகன,; சைக்கிள், மாலை இவைகளை நினைக்க நினைக்க புதுத் தெம்பு வர நீந்துகின்றேன். இப்போது நீந்த வலது காலை எடுக்கின்றேன். காலை நிமிர்த்தவே முடியவில்லலை. தசை பிடித்துக் கொண்டதை உணர்கின்றேன். பெரிய தசைநார்கள்  சின்னத் தசைநார்களுக்குள் வழுக்க முடியாமல் பொறுத்துக் கொள்கின்றன. நிலத்திலே தசைப் பிடிப்பு வந்தால்  ஓய்வெடுத்துக்கொண்டு காலை அழுத்திவிடுவதால் தசைப்பிடிப்பிலிருந்து தப்பலாம். ஆனால் நீரில் அப்படிச்செய்ய முடியாது. கால் இயங்காமல் விட்டால் மூழு;கி இறப்பது திண்ணம். பல்லைக் கடித்து அலறிக் கொண்டு, அப்படி அலறுகையில் வாய்ககுள் கடல் நீர்; போகி;றது. காலை நிமிர்த்துகின்றேன். காலை கத்தியால் அரியும் வேதனையுடன்  கால் பழைய நிலைக்கு வருகின்றது. உண்மையாக இந்தக் காலுக்குள் நிறையத் தசைகள் பிய்ந்திருக்கும். இவை மீளப்பெற இரண்டு வாரத்திற்கு மேல் எடுக்கும். அதுவரை வேதனைதான். இப்போது கரையைப் பார்க்கின்றேன். கரை தெளிவாகத் தெரிகின்றது. கரை என்னிலிருந்து எப்படியும் ஒரு மைல் இருக்கும்போல் இருக்கின்றது. கரையை இடமிருந்து வலமாக நோக்குகின்றேன். சின்ன சின்னதாக மரங்கள். அவைகள் பனை மரங்களாகத்தான் இருக்கவேண்டும். அதற்கு சற்று அப்பால் வெள்ளையாய் அந்தக் கட்டடம் தெரிகின்றது. அது நிச்சயமாக அந்த ஜேர்மன்காரன் வருசத்தில் ஒரு தடவை தங்குவதற்காக கட்டிய ஜென்னா ஹோட்டல். இப்போது எந்தப் பகுதிக்கு என்னை நீரோட்டம் இழுத்து வந்திருக்கின்றது என்பதை உணர்கின்றறேன். கரைக்கு இன்னும்; அறுநூறு மீற்றர்தான் இருக்கும்போல. உற்சாகத்துடன் கரையை அடைய, மனைவிக்காக, மகளுக்காக, மகனுக்காக, சைக்கிளுக்காக, மாலைக்காக நீந்திக் கரையை அடைகிறேன். மிகவும் களைத்து மயங்கிய நிலை. அலை அடித்து மீண்டும் கடலுக்குள் போகாதிருக்க கொஞ்சம் மணலுக்குள் ஏற வேண்டும். அதற்கு கூட உடம்பில் பலமில்லை. உடம்பு இயங்க மறுக்கிறது. மனம் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மணலுக்குள் ஏறி தலையைத் தூக்கிப் பார்க்கி;றேன். முள்ளுக் கம்பி வேலிகளும் மணல் மூடைகளும்  கொஞ்ச தூரத்தில் தெரிகின்றன. இந்தக் கடற்கரை போகரை என்பதை உணர்கையில் மயங்கிப் போகிறேன்.

சூரியனின் கதிர்பட்டு கண்விழித்துப் பார்க்கிறேன். உச்சி வெயில். அந்த முகாம் தெரிகின்றது. இதே சூரியனின் கதிர்தான் அந்த  முகாமை முட்கம்பி வேலிகளுக்கூடாக ஊடறுத்து, ஜன்னலுக்கூடாகச் சென்று, கட்டிலிலே படுத்துக் கிடந்த ராஜபக்சவினதும் பாயிலே படுத்துக் கிடந்த சேவகபக்சவினதும் முகத்திலே பட்டு, அவர்களை இன்று காலையில்  துயிலெழுப்பியது. வழமையான காலைகள் போல் இந்தக் காலையிலும் அவர்கள் ஷதறு|(நட்சத்திரம்)க்களைப் பற்றிச் சிந்தித்தார்கள். ராஜபக்ச இரண்டு தறுக்கள். உயர்ந்த ஸ்த்தானம். சேவகபக்ச ஒரு தறு. கீழ்ஸ்த்தானம். பதவியுயர்வுபெற்று  மாற்றலாகி அந்த முகாமிலிருந்து  நகரப்பகுதிக்கோ அல்லது தலை நகருக்கோ அல்லது பயங்கரவாதப் பிரச்சினைகள் குறைந்த பகுதிக்கோ செல்வதற்கு ஆளுக்கொரு தறு தேவைப்பட்ட நிலையில் தான் இன்று உச்சிவெயில் பகலில்  என்னை மயக்கத்திலிருந்து எழுப்பிய சூரியக் கதிர் அவர்கள் இருவரையும் காலையில் உறக்கத்திலிருந்து எழுப்பியது.

மயக்கம் தீர்ந்தாலும் பசியும், தாகமும், களைப்பும் என்னை வாட்டியது. நான் போகரை முகாமுக்கு முன்னால் கரையொதுங்கியதை உணர முடிந்தது. மரத்தால விழுந்தவனை மாடு வெட்டுமா? இல்லாவிட்டால் தோணி கவிழ்ந்தவனுக்கு மரக்கட்டையா?. விதி  எழுதியபடிதான் எல்லாம் நடக்கும் என்று நினைக்கி;றேன். கொஞ்ச நேரத்தில் நான்கு பேர் வந்தனர். என்னை உடம்பு பூராகத் தடவிவிட்டு  முகாமுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள். மிகுந்த சக்தியை வரவழைத்துக்கொண்டு  மிக்க பிரயாசைப்பட்டு அவர்கள் மொழியில் தண்ணீர் கேட்டேன். எப்படியோ அதைப் புரிந்து தண்ணீரை வாய்க்குள் ஊற்றினார்கள். இப்போது மனதுக்கு மட்டும் தெம்பு வந்தது.  உடல் பலவீனமடைந்து இருந்தது. கேட்ட கேள்விக்கெல்லாம் மனைவியையும் மக்களையும் நினைத்துக் கொண்டு பதில் சொன்னேன். 

இப்போது ராஜபக்சவும் சேவகபக்சவும் வருகிறார்கள். அந்த நான்கு பேரும் அணிவகுத்து சல்யூட் பண்ணி அவர்களுக்கு மரியாதை செய்கிறார்கள்.இருவரிடமும் என்னைப் பற்றிச் சொல்கிறார்கள். இருவரும் கேட்டுவிட்டு என்னமோ கதைக்கிறார்கள். அது எனக்கு ஓரளவு தெளிவாக விளங்குகின்றது. அலற வேண்டும் போல் இருக்கின்றது. ஆனால் முடியவில்லை. மனம் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அவர்களின் காலைப் பிடித்து கையெடுத்து கும்பிட்டு யாசிக்க வேண்டும் போல் இருக்கிது. யாசிப்பது இழிவுதான் என்றாலும் என் மனைவிக்காகவும,; என் மகளுக்காகவும், என் மகனுக்காகவும், அந்தச் சைக்கிகளுக்காகவும், மாலைக்காகவும் செய்ய நினைக்கி;றேன். முடியவில்லை. அழுகி;றேன். கதறுகி;;றேன். ஆனால் வெளியே சத்தம் வரவில்லை. என் உடலும் அசையவேயில்லை. பலவீனம் என் உடலை இயங்கச் செய்யவிடவில்லை.


அந்த நான்கு பேரும் என்னை இழுத்துக் கொண்டு என்னைப் பொறுக்கிய இடத்தில்  போட்டுவிட்டு வந்தார்கள். இப்போதும் அந்தச் சூரியக்கதிர் என்முகத்தில் படுகிறது. ஆனால் சுடவில்லை. என் கதை முடியப்போகி;றது என்பதை உணர்கி;றேன். என்னை நோக்கி ராஜபக்சவும், சேவகபக்சவும் ஆளுக்கொரு துப்பாக்கியுடன் வருவதைக் காண்கிறேன். என்னை சுட்டுக் கொல்லப்போகிறார்கள் என்பதை உணர்கி;றேன். ஒரு வேளை இருவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கலாம். சைக்கிளும,; மாலையும் வாங்கித் தருவதாக வாக்களித்தும் இருக்கலாம். என் கதையை முடிக்கப் போவதால் அவர்களின் சந்துகளில் ஏறப்போகிற ஷதறு|க்கள், அவர்களுக்கு பதவியுயர்வுகளையும,; மாற்றல்களையும்  கொடுத்து நகரப் பகுதிக்கோ அல்லது  தலைநகர்ப் பகுதிக்கோ அல்லது பயங்கரவாதப் பிரச்சினைகள் குறைந்த பகுதிக்கோ  அனுப்பி வைக்கும். எனது மகளினதும், எனது மகனினதும் வாழ்க்கையையும் சைக்கிளையும,;  மாலையையும் அழித்து அவர்களின் மகளுக்கும், மகனுக்கும், சைக்கிளும், மாலையும் கொடுக்கப்போகிறார்கள். ஒன்று "பட்டால்"உண்டு வாழ்வு என்பது இதுதானாக்கும். சாம்பல் மேட்டில் கட்டிடம் கட்டி அவர்களது மக்களுக்கு கொடுக்கப் போகிறார்களாக்கும்.


இப்போது இருவரும் என்னை நெருங்கிவிட்டார்கள். முதலில் சேவகபக்ச துப்பாக்கியை நீட்டி என் வற்றிலே  சுடுகி;றான். ஏதோ திரவமாக மெல்ல மெல்ல உடலிலிருந்து கசிவதை உணர்கிறேன். அதைப் பார்க்கக்கூட எனக்கு திராணி இல்லை. இப்போது ராஜபக்சவின் முறை. எனது நெஞ்சிலே மூன்று முறை சுடுகி;றான். இப்போது என் நெஞ்சிலிருந்தும் திரவம் கசிந்து கொண்டிருக்கின்றது. நான் சாகப் போகிறேன் போல. வேறெங்கோ தேடுதலில் கிடைத்த அல்லது பதிவேட்டில் பதியப்படாத உருண்டையான குண்டோ அல்லது நீளமான துப்பாக்கியோ அதிசயமாய் தான் தோன்றியாய் எனதருகில் உதிக்க தலை நகருக்கு செய்தி பறக்கும். உடனே போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ந்து பார்க்காது  நாளை காலை குளக்கரை, தினவாரவீர ஏடுகள்  ஷகடற்கரும்- என்று தொடங்கி இந்த நாட்டில் இல்லாத அந்த வீரமான மிருகம்- பலி| என கொட்டை எழுத்துக்களில் போடும். இப்போது எனது வலது கண்ணில் எனது மனைவியும், என் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகளும், என் ஆறுமாத மகனும், என் இடது கண்ணில் மகளுக்கு வாங்கித் தருவதாக வாக்களித்த சைக்கிளும், ஒக்சிசன் சிலிண்டர் வாங்குவதற்காக ஈடுவைத்த மகனின் மாலையும், கடலின் நீலமும் ராஜபக்சவினதும் சேவகபக்சவினதும் சந்துகளை அலங்கரிக்கப் போகின்ற அந்த பச்சையும் நீலமும் கலந்த தறுக்கள் மாதிரி மின்னி மின்னி தெரிகின்றபோது  என் காலிலிருந்து உயிர்; நெஞ்சுக்கூடாக தொண்டைக்குள் வந்து,  எனது இறுதி மூச்சோடு கலந்து இரு கண்களுக்கூடாகவும் வெளியேறத் தயாராகி நின்றது.

(சரிநிகர்)