புதன், பிப்ரவரி 05, 2014

புத்தக விமர்சனம் - யாருடனும் குரோதமில்லை.


எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை - ப.தியாகு

தமிழில் நவீன கவிதை எனப் பயிலப்பட்டு வந்த பிரதிகள் தங்களிடம் மிகச் சொற்பமான எடுத்துரைப்பு முறைமைகளையே பயன்படுத்தி வந்திருக்கின்றன. இன்னும் அப்படியே பயன்படுத்துகின்றன. அவைகளில், மிகப் பிரபலமான முறைமைகளை இப்படி தொகுக்கலாம்.

1. விவரணை அல்லது விபரிப்பு முறைமை. இதில் செய்தி விவரணை(commentary) உள்ளீட்டு விவரணை.

2. காட்சியை சொற்களால் விளங்கப்படுத்தல்.

3. வரைவிலக்கணம் உருவாக்குதல். மற்றும் பொன்மொழிகளைப்போல சொற்களைக் கொண்டு வாக்கியங்களை அமைத்தல். அல்லது அடண்டையும் நெருங்கிவரக்கூடய வகையில் சொற்களைப் பயன்படுத்துதல்.

4. விளக்கம் சொல்லுதல். தலைப்பு ஒன்றை வைத்துக்கொண்டு, அதற்குக்கீழே, சொற்களை அடுக்குதல். அந்தச் சொற்கள் வாசிப்பவர்களை, தலைப்பிற்கு கொண்டுவரும் வகையில் செயற்படும்படி கையாளுதல். அல்லது, ஏதாவதொரு கருத்திற்கு விளக்கம் சொல்லுவது மாதிரி வாக்கியங்களை அமைத்தல்.

5. இவைகள் அனைத்தையும், கூட்டியும் குறைத்தும் ஒரு பிரதிகொண்டிருப்பதற்கு ஏதுவாக குறித்த பிரதியை உருவாக்குதல்.

இவ்வளவுதான், அதனோடு, ஈழத்தில் பிரபலமாக இருந்த இரண்டு விசயங்களையும் இணைக்க வேண்டும். ஈழத்தில் நவீன கவிதை வந்தது 80களில்தான். வந்தபிறகு, அங்கு நடந்த அழிச்சாட்டியங்கள் சொல்லி மாளாது. இது இங்கு தேவையில்லை.

பிரச்சாரத் தொனி முதன்மைப்படுவதும், prose அதாவது உரைநடைத்தன்மை துருத்திக்கொண்டிருக்கும் வாக்கியங்களின் பெருக்கமும் சேர்த்து பார்த்தால், நவீன தமிழ் கவிதையின் எடுத்துரைப்பு முறைமைகளின் குறுக்கு வெட்டு முகம் இதுதான்.

கதையை கவிதையாகச் சொல்லுதல் என்பதுதான் தமிழின் காவியக்கால வழக்கம். இதை நவீன கவிதையின் ஆரம்பத்தில் ஞானக்கூத்தன் போன்ற பலர் பயன்படுத்தினர்.
எடுத்துரைப்பு பல் தன்மை கவிதைக்கு அவசியம்தானா எனக்கேட்டால் ஆம் என்றே சொல்லுவேன். அன்று முதல் இன்றுவரை, கவிதை என்றால் அதிகமும் அதன் உள்ளடக்கம் மாத்திரமே கவனத்தை ஈர்த்துவந்திருக்கிறது. எது குறித்து எழுதியிருக்கிறது என்றே பயின்று வந்திருக்கிறார்கள்.ஒரு பிரதியை கவிதையாக நிறைவடையச் செய்வதற்கு எந்த வழிகளில் இந்தப் பிரதி முயற்ச்சிக்கிறது என்று கவனிக்கவில்லை. அந்தப் பெரும் இடைவெளி இன்னும் நிரப்பப்படாமலே இருக்கிறது.

அதிலும் தலைப்பிற்கு விளக்கம் சொல்லும் எடுத்துரைப்பு முறைமையே மிகவும் பிரபலமானது. அதிகமான கவிதைகளின் செயல்முறையே இதுதான். உதாரணமாக, ஒரு விசயத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு தலைப்பும் அதன் கவிதையையும்.
கவிஞர் கலாப்ரியாவின் கவிதை இது.

அவளின் பார்வைகள்

காயங்களுடன்
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத்
தேடிக் கொத்தும்
காக்கைகள்.

இதை சற்று கவனமாக அவதானியுங்கள். இந்தத் தலைப்பை எடுத்து கவிதையின் ஓரிடத்தில் இணைத்தாலும் ஒன்றுமாகிவிடுவதில்லை. அதை இப்படிச் செய்து காட்டுகிறேன்.

காயங்களுடன்
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியை
தேடிக் கொத்தும்
காக்கைகள்
உன் பார்வைகள்.

இப்போது, தலைப்பில்லை. ஆகவே, நவீன கவிதைகள் பெரும்பாலும் தலைப்பிற்கு விளக்கம் சொல்ல கடுமையாக உழைத்தன என்பதை இதைவிட விபரிக்க முடியாது. தலைப்பை எடுத்து கவிதை வரிளில் சேர்த்துவிட்டால், தலைப்பென்பதே மறைந்துவிடுகிறது பாருங்கள். அந்தளவிற்கு நமது நவீன கவிதைகள் தலைப்பிற்கு விளக்கம் சொல்ல முயற்சித்திருக்கின்றன.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால், அதற்கான பிரதானமான காரணம் ப.தியாகு அவர்களின் ” எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை” என் கவிதைத் தொகுப்பை படித்துக்கொண்டிருந்ததுதான். ப.தியாகு அவர்கள் தனது கவிதைகளைத் தொகுப்பதற்கு சற்று அவசரப்பட்டுவிட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இவருடைய அதிகமான கவிதைகள் செய்தி விவரனையாகவோ, அல்லது காட்சி விவரணையாகவோ சுருங்கிவிடுகின்றன. அந்தச் செய்திகள் தங்களைக் கவிதையாக மாற்றிவிடக்கூடிய எந்த சமிக்ஞைகயையும் கொண்டிருக்காமலே இருக்கின்றன.

செய்திகளை, சம்பவங்களை, காட்சிகளை கவிதையில் பயன்படுத்தக்கூடாதா என உடனடியாக ஒரு கேள்வி உங்களிடம் எழ வாய்ப்பிருக்கிறது. ஆம், அவை கவிதைக்குள் நுழையலாம். ஆனால், கவிதைக்குள் நுழைந்ததும் காட்சியாக எப்படி இருந்ததோ அப்படி அல்ல. அது தன்னை வேறு பரிமாணத்திற்கு மாற்றிவிடவேண்டும். ஒரு காட்சியை அப்படியே நடித்துக்காட்டும் சொற்கள் கவிதையாக மாற வாய்ப்புக்கள் குறைவு. இருப்பதை அப்படியே சொன்னால், அங்கு கவிஞனின் பங்களிப்புத்தான் என்ன? அதாவது, அந்தப் பிரதியில் கவிஞனின் கற்பனைச் செயல் என்ன? அந்தக் கற்பனைச் செயல்களை கைவிட்டுவிட்ட நிலையில், அழகான செய்திகளாக இவரின் அனேக கவிதைகள் இடைநடுவே நின்றுவிடுகின்றன.

உதாரணமாக ஒன்றைப் பார்க்கலாம். இந்தக் கவிதையை எடுத்துக்கொள்வோம்.

ஒரு குருவிகள்

கண்ணாடியினுள்ளிருந்து ஒன்று
வெளியிலிருந்து ஒன்றாக
ஒன்றையொன்று
கொத்திக்கொள்கின்றன
ஒரு குருவிகள்.

இந்தக் கவிதைத் தலைப்பே மீண்டும் கவிதையில் வந்து நின்று இடைஞ்சலாக மாறிவிடுவதைப் பாருங்கள். இது கவிதைக்கு தேவையற்ற மேலதிக விளக்கம்தான். ஒன்று தலைப்பு இல்லாதிருந்திருக்கலாம். அல்லது, அந்தத் தலைப்பே மீண்டும் வராதுபோயிருக்கலாம். இது சிறிய விசயம்தான்.

இதில் முக்கியமான ஒரு விசயமிருக்கிறது. அது என்னவென்றால், இது ஒரு காட்சியை செய்தியாக சொல்லுவதைக் கடந்து செல்லவில்லை என்பதுதான். இந்த விபரிப்பு, வேறு பரிமாணத்தை சிறிதும் வெளிப்படுத்தவில்லை. ஒரு காட்சியை எழுத்தாக சொல்கிறார் அவ்வளவுதான். இதில் கவிஞரின் பங்களிப்பேதுமில்லை.

கண்ணாடியில் குருவி நிற்பதும், கண்ணாடியில் வேறொரு குருவி தெரிவதுபோல அதைக் கொத்துவதும் காட்சிதான். நாம் சாதாரணமாக காணும் காட்சி ஒன்றுதான். ஒரு குருவிகள் என்ற சொற்பிரயோகத்தில், ஒன்றுதான் இரண்டாக தெரிகிறது என்பதை சொல்லுவதுதான். இந்தக் காட்சியை பிரதி கவிதையாக மாற்ற எந்த சமிக்ஞையையும் கொண்டிருக்கவில்லை. அதனால், குறித்த காட்சி பற்றிய செய்தியாகவே நின்றுவிடுகிறது.

இப்போது பாருங்கள்.

கண்ணாடியினுள்ளிருந்து ஒன்று
வெளியிலிருந்து ஒன்றாக
ஒன்றையொன்று
கொத்திக்கொள்கின்றன
ஒரு குருவிகள்
“குருவி பறந்து சென்ற பின்னும்
கண்ணாடியில் இருக்கிறது.“

0 மேற்கோள்களுக்குள்ளிருப்பது, எனது வாக்கியம்.

இது அதிகமும் கவிதையை நெருங்கிவருவதாக இல்லையா? இங்கே கவிஞனின் பங்களிப்பிருக்கிறது. செய்தியை அதாவது, காட்சியை செய்தியாகச் சொல்லிவிட்டு அத்தோடு, தனது கற்பனைச் செயலையும் அதனோடு இணைத்திருக்கிறான். இப்படியான உழைப்புகள் இவரின் பல கவிதைகளுக்கு தேவைப்படுகின்றன. அதிகமான கவிதைகள் செய்தி என்ற இடத்தைத் தாண்டி சென்றுவிடவில்லை. வேண்டுமானால், அழகான செய்திகள் என்று சொல்லிவிடலாம்.

இன்னொரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஒரு கை நீரள்ளி
மேல் தெளிக்கிறான்
துணுக்குற்றதுபோல
கொஞ்சமே அசைந்துகொடுக்கிறது
இன்னும்
உயிரிருக்கும் ஒரு மீன்
அதைத்தான்
தேர்ந்தெடுக்க வேண்டும் நாம்.

இந்தக் கவிதையை கவனித்துப் பாருங்கள். இது கவிதை பலவீனமான கவிதைத் தன்மையுடனிருப்பது புரியும். இன்னும் கொஞ்சம் எதுவோ வேண்டும் என்பதுபோல இதன் உள்ளீடு நம்மிடம் பரிந்துரைக்கிறது. அதாவது, ஒரு சிறு கேள்வியை இதை நோக்கி எழுப்பிவிட்டால், இது ஒரு அறிக்கையாக உடனடியாக மாறிவிடவே வாய்ப்பதிகம். மிகக் குறைவான கவிதைத் தன்மைகளைக் கொண்டிருக்கும் பிரதிகளுக்கு இப்படி நேர்வது சாத்தியம்தான். இப்படி ஒரு கேள்வியை இங்கே சொல்லிப்பார்க்கலாம்.

” மீன் வாங்குவது எப்படி“?

இந்தக் கேள்வி குறித்த கவிதையின் முன் பிரசன்னமானால், இப்படித்தான் மீன் வாங்குவது என்ற ஒரு அறிவுறுத்தலாக இந்தக் கவிதை தன்னை மாற்றிக்கொள்ளவே சாத்தியமுண்டு. ஒரு பிரதி எந்தக் கேள்விகளின் எதிரிலும், தனது கவிதைத் தன்மையை இழந்துவிடாமல் தக்கவைத்துக்கொள்ளும் படியான கற்பனைச் செயலினால் தன்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அதனாலேயே, அது கவிதைப் பிரதியாக இருக்கிறது.

அதே நேரம், ”போஸ்ட் ஆபீஸ்” என்ற மிக ஆற்றல் மிக்க கவிதையையும் இவர் எழுதியிருக்கிறார். அதனால்தான் சொல்கிறேன். தனது கவிதைகளைத் தொகுப்பாக்கும் விசயத்தில் ப.தியாகு அவசரப்பட்டுவிட்டார் என்று. இந்த அவசரம், ஒரு சிறந்த கவிஞனாக தன்னை அடையாளப்படுத்துவதிலிருந்து தடுத்துவிட்டிருக்கிறது.

நல்லது, தோழர் ப.தியாகு உங்களிடம் கவிதைக் கற்பனை போதுமானதாக இருப்பதாகவே உங்கள் கவிதைகள் சொல்லுகின்றன. அவைகளை பண்பு மாற்றம் செய்து கவிதையாக நிறைவடையச் செய்யும் செயல் முறைகளில் கவனம் செலுத்தி உழைத்தால் நீங்கள் அடைய இருக்கும் இடம் மிகப் பெரியதுதான். வாழ்த்துக்கள் தோழர்.